நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு இப்போது இருந்தே பாடுபட தொடங்குங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு இப்போது இருந்தே பாடுபட தொடங்குங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

‘நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு இப்போது இருந்தே பாடுபட தொடங்குங்கள்' என அக்கட்சியின் தொகுதி பார்வையாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தி.மு.க. தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலமாக காலை நடந்தது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இதில் தமிழகத்தில் 234 தொகுதிகளை சேர்ந்த தி.மு.க. பார்வையாளர்கள் பங்கேற்றனர். மேலும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

2 கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கு

தி.மு.க.வுக்கு 2 கோடி உறுப்பினர் என்ற நம் இலக்கை விரைந்து அடைய துரிதமாக பணியாற்ற வேண்டும். இந்த விஷயத்தில் கட்சியின் மாவட்ட செயலாளரை காட்டிலும் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களுக்குத்தான் பொறுப்பு அதிகம்.

பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். தொகுதி பார்வையாளர்களின் பணிதான் தேர்தலின் மகத்துவமான அம்சம். அந்த வகையில் தி.மு.க.வின் வெற்றிக்கு தொகுதி பார்வையாளர்களின் பணிகளே அடித்தளம் ஆகும்.

இப்போதே பாடுபட தொடங்குங்கள்

வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அனைத்து தேர்தல் பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு பணியாற்ற வேண்டும். தேர்தலுக்கான பணிகளை இப்போது இருந்தே தொடங்குங்கள்.

ஒவ்வொரு தொகுதி பார்வையாளரும் இதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு தி.மு.க.வின் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story