கல்விக்கொள்கையை வகுக்க மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் வேண்டும் - அமைச்சர் பொன்முடி பேச்சு


கல்விக்கொள்கையை வகுக்க மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் வேண்டும் - அமைச்சர் பொன்முடி பேச்சு
x

கல்விக்கொள்கையை வகுக்க மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் வழங்கவேண்டும் என்று சென்னையில் நடந்த கல்வி தொடர்பான கருத்தரங்கில் அமைச்சர் பொன்முடி பேசினார்.

கருத்தரங்கம்

இந்தியாவுக்கான கல்வி மேம்பாட்டு சங்கம் சார்பில் 'சிறந்த மாணவர் சேர்க்கைக்காக ஆராய்ச்சி கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் கற்றல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் சீதாராம், இந்தியாவுக்கான கல்வி மேம்பாட்டு சங்க தலைவர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

முதல்-அமைச்சரின் நோக்கம்

கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மட்டும் உயர்ந்தால் போதாது. மாணவர்களின் கல்வித்தரமும் உயரவேண்டும் என்பது தான் முதல்-அமைச்சரின் நோக்கமாக இருக்கிறது. அதனை அடிப்படையாக கொண்டுதான் நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது. என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் பயிற்சி அளித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் தொழிற்துறையுடன் இணைந்து பாலிடெக்னிக் கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக மாற்ற இருக்கிறோம். அதனை வரும் ஆண்டில் நடைமுறைப்படுத்த உள்ளோம். தொழிற்பயிற்சி நிலையங்கள், பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களுக்குஉலகத்தரத்திலான பயிற்சிகளை வழங்க திட்டமிட்டு இருக்கிறோம். அதேபோல், மாணவர்களுக்கும் உலகத்தரத்திலான கல்வியை வழங்குவதும் எங்கள் நோக்கம் ஆகும்.

முழு சுதந்திரம்

கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகள் கட்டாயம். மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆங்கிலம் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும், தொழிற்சாலைகளில் தங்கள் பணி அனுபவங்களை அதிகரித்து கொள்வதற்கும் தேவையாக இருக்கிறது.

புதிய கல்விக்கொள்கையில் ஒரு சில வரவேற்கத்தக்க நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அப்படி அது இருந்தாலும், நுழைவுத்தேர்வு உள்பட பல முடிவுகளை நாங்கள் எதிர்க்கிறோம். உதாரணமாக 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு வைத்தால் அவர்கள் எவ்வாறு எழுதுவார்கள்? இதனால் கல்வியைத்தொடர முடியாமல் அவர்கள் இடைநின்று விடுவார்கள். எனவே மாநில அரசுகளுக்கு கல்விக்கொள்கையை வகுக்கவும், பின்பற்றவும் முழு சுதந்திரத்தை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story