அம்மன் கழுத்தில் அணிந்திருந்த நகை, உண்டியல் பணம் திருட்டு


ஜெயங்கொண்டம் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த நகை மற்றும் உண்டியல் காணிக்கை பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரியலூர்

மகா காளியம்மன் கோவில்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்தில் புது ஏரி மணக்கரை செல்லும் சாலையில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி மணி (வயது 57) தனது வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவில் கதவின் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது சன்னிதானத்தில் முன்பக்கம் பூட்டி இருந்த கேட் மற்றும் உண்டியல் ஆகியவை உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி, குண்டு காசு மற்றும் உண்டியல் காணிக்கை பணம் ஆகியவை திருட்டு போய் இருந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கோவிலில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த நகை மற்றும் உண்டியல் பணம் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story