தமிழகத்தில் கால்நடை மருந்துகள் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
கால்நடைகளுக்குத் தேவையான தடுப்பூசி மருந்துகளை உடனடியாக கால்நடைகளுக்குப் போடவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கால்நடை மருந்துகள் தட்டுப்பாடு தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
" தனக்குள்ள வலி, வேதனைகளை வாய் திறந்து சொல்ல முடியாத அப்பாவி கால்நடைகளின் துயரங்களைக் கண்டறிந்து, அவைகளின் துயர் துடைக்கும் கடவுள்களாக கால்நடை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் பணியாற்றுகிறார்கள். கடந்த 18 மாத கால திமுக ஆட்சியில், இந்தத் துறை பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறது.
2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, அதிமுக ஆட்சியின்போது கால்நடைத் துறை மூலம் பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. இன்று இத்துறை, பணியாளர் பற்றாக்குறையால் தள்ளாடுகிறது. முறையான நியமனங்கள் நடைபெறவில்லை என்று புகார்கள் வருகின்றன.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பருவகால மாற்றத்திற்கு ஏற்ப கால்நடைகளுக்கும், கோழிகளுக்கும் மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு தேவையான தடுப்பு மருந்துகள் போடப்படும். கால்நடைகளுக்கான மருந்துப் பொருட்களும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் மொத்தமாக வாங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அனுப்பப்படும்.
ஆனால், இதுவரை தடுப்பு மருந்துகள் வாங்கவில்லை. குறிப்பாக மாடுகளுக்கு வேண்டிய மருந்துகளை இதுவரை வாங்காததினால் இந்தாண்டு தமிழகம் முழுவதும் மாடுகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்படவில்லை என்றும்; இதனால், மாநிலத்தின் பல பகுதிகளில் மாடுகளுக்கு நாக்கிலும், வாயிலும் அம்மை நோய் தாக்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஈரோட்டில் மட்டும் சுமார் நூற்றுக்கணக்கான மாடுகள், தடுப்பூசி போடாததால் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் கால்நடை மருத்துவர்களிடம் புகார் தெரிவித்தனர். அப்போது, கால்நடை மருத்துவர்கள் மாடுகளுக்குப் போடவேண்டிய தடுப்பு மருந்து இதுவரை அரசால் வழங்கப்படவில்லை என்றும், ஆடுகளுக்குப் போடவேண்டிய தடுப்பு மருந்து மட்டும் உள்ளதாகவும், எனவே, அத்தடுப்பு மருந்தையே மாடுகளுக்குச் செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், மனிதர்களுக்கும் மருந்துகள் கொள்முதல் செய்வதில்லை, கால்நடைகளுக்கும் கொள்முதல் செய்வதில்லை. இதுமட்டுமல்ல, இந்த திமுக ஆட்சியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா சுமார் 1,100 ஏக்கரில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு, பகுதி பணிகள் முடிக்கப்பட்டு, நான் முதலமைச்சராக இருந்தபொழுதே இப்பூங்காவின் ஒரு பகுதி திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
தற்போது, மீதமுள்ள பணிகளும் முடிந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, உடனடியாக முடிவுற்ற கட்டிடங்களை பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இக்கால்நடைப் பூங்காவிற்கு இணையாக மீதியுள்ள சுமார் 300 ஏக்கர் நிலம் ஒரு காலணி தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அங்கு தோல் பதனிடும் தொழிற்சாலையினைக் கொண்டு வர இந்த திமுக அரசு முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன.
இந்த தோல் பதனிடும் தொழிற்சாலை இங்கு வந்தால், இப்பகுதி முழுவதும் உள்ள நிலத்தடி நீர், சுற்றுப்புறச் சூழல் மற்றும் அருகிலுள்ள நீர்நிலைகள் அனைத்தும் மாசுபட்டு, இப்பகுதியின் முக்கியத் தொழிலான வேளாண் தொழில் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, இத்திட்டத்தினை இப்பகுதியிலுள்ள விவசாய சங்கங்களும், விவசாயிகளும் கடுமையாக எதிர்க்கின்றனர். இத்திட்டத்தினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்க்கிறது.
இதுபோன்று, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுக்காவில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் இனாமாக வழங்கப்பட்ட நிலத்தில், செட்டிநாடு கால்நடைப் பண்ணை இயங்கி வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் நாட்டின எருதுகள் இன விருத்தி ஆராய்ச்சிக்காக சுமார் 5000-க்கும் மேற்பட்ட நாட்டின கால்நடைகள் அப்பண்ணையில் வளர்க்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன.
தற்போது, இப்பண்ணையில் நூற்றுக்கும் குறைவான மாடுகள் மட்டுமே உள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படி எண்ணிக்கையைக் குறைத்து, இப்பண்ணையை மூடும் முயற்சியில் இந்த திமுக அரசு ஈடுபடுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எந்த நோக்கத்திற்காக இந்த நிலம் தானமாக வழங்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேற, அதாவது, நாட்டின மாடுகள் இனப் பெருக்கத்திற்கான ஆய்வுகளையும், மாட்டுப் பண்ணையைத் தொடர்ந்து நடத்திடவும் இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
எனவே, இந்த திமுக அரசு இனியாவது விழித்துக்கொண்டு கால்நடைகளுக்குத் தேவையான தடுப்பூசி மருந்துகளை உடனடியாக கால்நடைகளுக்குப் போடவேண்டும் என்றும், தலைவாசல் கால்நடைப் பூங்காவில் சுற்றுச்சூழலுக்கும், நீர்நிலைகளுக்கும் ஆபத்தை உண்டாக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலை ஆரம்பிக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டுமென்றும், சிவகங்கை, செட்டிநாடு கால்நடைப் பண்ணையில் மீண்டும் முழு அளவில் பாரம்பரிய கால்நடைகளைக் காக்கும் வகையில் அதிகளவு நாட்டின கால்நடைகளை வளர்க்க வேண்டும் என்றும் இந்த அரசை கடுமையாக வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.