திருமங்கலம் அருகே அரசு பஸ் மீது கல் வீச்சு; 3 பெண்கள் காயம்


திருமங்கலம் அருகே அரசு பஸ் மீது கல் வீச்சு; 3 பெண்கள் காயம்
x

அரசு பஸ் மீது கல்வீசிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமங்கலம்,

தென்காசியில் இருந்து நேற்றுமுன்தினம் புறப்பட்ட ஒரு அரசு பஸ் மதுரை நோக்கி வந்தது. அந்த பஸ்சில் செக்கானூரணி பணிமனையை சேர்ந்த டிரைவர் தனபாண்டியனும், கண்டக்டராக பால்பாண்டியும் பணியில் இருந்தனர். நேற்று அதிகாலையில் அந்த பஸ் டி.கல்லுப்பட்டி நிறுத்தத்தில் நின்றது. அந்த பஸ்சில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஏறினர்.

அங்கிருந்து புறப்பட்டு திருமங்கலம் நோக்கி பஸ் வந்தது. திருமங்கலம் அரசு கால்நடை மருத்துவமனை அருகே வந்தபோது, திடீரென மர்மநபர்கள் அந்த பஸ் மீது கல் வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சுக்கு நூறானது. பஸ்சில் இருந்த பெண் பயணிகள் மீது கண்ணாடி துகள்கள் விழுந்ததில் சிலர் காயம் அடைந்தனர். உடனடியாக பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.

அப்போது இருட்டு பகுதியில் நின்று பஸ்சில் கல் வீசிய மர்மநபர்கள் தப்பி ஓடினர். கல் வீச்சில் காயம் அடைந்த 3 பெண்கள் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து பஸ் டிரைவர் திருமங்கலம் நகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து, அரசு பஸ் மீது கல்வீசிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story