குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணிகள் நிறுத்தம்


குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணிகள் நிறுத்தம்
x

தேனி மாவட்டத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தேனி

ஆதார் பணிகள் நிறுத்தம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆதார் பதிவு மையங்கள் உள்ளன. இங்கு ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது அரசின் பல்வேறு திட்டப் பணிகளுக்கும், பள்ளியில் மாணவ, மாணவிகளை சேர்ப்பதற்கும் கூட குழந்தைகளின் ஆதார் விவரங்கள் கேட்கப்படுகிறது.

இதற்காக ஆதார் மையங்களில் குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க பெற்றோர்கள் ஆர்வத்துடன் சென்று வருகின்றனர். ஆனால், கடந்த ஒரு வார காலமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக குழந்தைகளுக்கு ஆதார் அட்டைகள் எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால், ஆதார் மையங்களுக்கு ஆர்வத்துடன் செல்லும் பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இதுகுறித்து ஆதார் மைய பணியாளர்களிடம் கேட்டபோது, "5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் விவரங்களை பதிவு செய்வதில் கடந்த ஒரு வார காலமாக தொழில்நுட்ப கோளாறு உள்ளது. விண்ணப்பித்தாலும் உடனடியாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படாமல் விண்ணப்பித்தாலும் அது பயனற்றதாகி விடுகிறது. இதனால், குழந்தைகளுக்கான ஆதார் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் நிலைமை சரியாக வாய்ப்புள்ளது" என்றனர்.

பெயர் சேர்க்க மறுப்பு

ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாததால் குழந்தைகளின் பெயர் விவரங்களை ரேஷன் கார்டில் சேர்க்கும் பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. ரேஷன் கார்டில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பெயரை சேர்க்க விரும்பினால் ஆதார் எண் அல்லது பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து விண்ணப்பிக்கலாம் என்று பொது வினியோக திட்ட இணையதளத்திலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பிறப்புச் சான்றிதழை வைத்து விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள், எவ்வித காரணமும் குறிப்பிடாமல் நிராகரிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க ஆதார் கட்டாயமில்லை என்று கூறப்பட்டாலும், ஆதார் எண் இல்லாமல் இணையவழியில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.

இதுகுறித்து வழங்கல் பிரிவு அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, "பிறப்புச் சான்றிதழை வைத்து பெயர் சேர்த்த பின்னர், ஆதார் எண்ணை பலரும் இணைக்காமல் விட்டு விடுகின்றனர். இதனால், ஆதார் எண் இல்லாமல் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களை நிராகரிக்கப்படுகிறது. நிராகரிக்கப்பட்ட காரணம் கேட்டு வரும் மக்களிடம் ஆதார் அட்டை எடுத்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தி வருகிறோம்" என்றார்.

தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெற முடியாமல் தவிப்பது ஒருபுறம் இருக்க, பிறப்புச் சான்றிதழை வைத்து ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கலாம் என்ற வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுத்த முடியாமல் மக்கள் அலைக்கழிக்கப்படுவதும் தொடர்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story