நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபிசிம்கா வீடுகளின் கட்டுமானப்பணி நிறுத்தம் - தமிழக அரசு


நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபிசிம்கா வீடுகளின் கட்டுமானப்பணி நிறுத்தம் - தமிழக அரசு
x

கொடைக்கானலில் உரிய அனுமதியின்றி நடிகர்கள் பாபிசிம்கா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் சொகுசு பங்களா கட்டி வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.

சென்னை,

கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் சொந்தமாக பங்களா கட்டி வந்தனர். இந்த பங்களா கட்டுவதற்கு கொடைக்கானல் நகராட்சியிடம் இருந்து உரிய அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜுனைத் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

அதில், கொடைக்கானலில் விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டடம் கட்டுவதால் கொடைக்கானலில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அருகில் உள்ள வீடுகளும் இடிவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளது. மேலும் கனரக இயந்திரங்கள் மூலமாக மலையில் உள்ள பாறைகளை அகற்றி உள்ளனர். இது விதிமுறைகளை பின்பற்றாமல் நடைபெற்று உள்ளது. எனவே உரிய அனுமதி இல்லாமல், விதிமுறைகளை பின்பற்றாமல் மலைப்பகுதியில் கட்டடம் கட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:- நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்கா ஆகியோர் கொடைக்கானலில் கட்டியுள்ள கட்டுமானம் உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது. இருவரும் மேற்கொண்ட கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் மேற்கொள்ளவில்லை. உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதியற்ற கட்டுமானம் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என வாதிடப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.


Next Story