புயல் எச்சரிக்கை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் அவசர கால ஏற்பாடுகள் தயார் - சிறிய ரக விமானங்களை பாதுகாக்க நடவடிக்கை


புயல் எச்சரிக்கை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் அவசர கால ஏற்பாடுகள் தயார் - சிறிய ரக விமானங்களை பாதுகாக்க நடவடிக்கை
x

புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசர கால ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்கவும், சிறிய ரக விமானங்களை பாதுகாக்கவும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சென்னை

வங்கக்கடலில் உருவாகி உள்ள 'மாண்டஸ்' புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக செய்யப்பட வேண்டிய தயார்நிலைகள் குறித்து ஆலோசிக்க விமான நிலைய ஆணையக அதிகாரிகள், தீயணைப்பு, விமான நிறுவன அதிகாரிகள், பாதுகாப்பு படை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார் தலைமை தாங்கினார். இதில் இந்திய வானிலை மைய விமான நிலைய அதிகாரி வி.ஆர்.துரை, விமான நிலைய செயல்பாடுகள் பிரிவு பொதுமேலாளர் எஸ்.எஸ்.ராஜு உள்பட அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்ள அவசர கால அனைத்து குழுக்களும் தயார் நிலையில் வைக்க தீர்மானிக்கப்பட்டது.

சிறிய ரக விமானங்களை சரியான முறையில் நங்கூரமிடுதல், கடுமையான காற்று அல்லது சீரற்ற கால நிலையில் அவை நகராதவாறு தரை கையாளும் கருவிகளை பாதுகாப்பதற்கும் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டது.

பலத்த காற்று காரணமாக செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்துக்கு வெளியே பாதுகாப்பான இடத்துக்கு தங்கள் விமானங்களை மீட்டு வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முடிவு செய்யப்பட்டன. அவசர காலத்தின்போது விமான நிலைய உணவு கூடங்களில் பொதுமான அளவு பொருட்களை அடுக்கி வைப்பதை உறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட தகவல் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story