மழைநீர் வடிகால் பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு சிவ் தாஸ் மீனா உத்தரவு


மழைநீர் வடிகால் பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு சிவ் தாஸ் மீனா உத்தரவு
x

மழைநீர் வடிகால் பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலைய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பஸ் நிலையத்தின் அருகில் ரூ.17 கோடியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியை பருவமழைக்கு முன்னதாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் தாம்பரம் சானடோரியம் ஜட்ஜ் காலனியில் ரூ.22 கோடியில் கட்டப்பட்டு வரும் பெண்களுக்கான தங்கும் விடுதிக்கான கட்டுமான பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.

மாதவரம் ரெட்டேரில் ரூ.43 கோடியே 19 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளையும் பார்வையிட்டார். அப்போது, ஏரியில் கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதைதொடர்ந்து திருவொற்றியூர் துறைமுகத்தில் ரூ.200 கோடியில் கட்டப்பட்டு வரும் சூரை மீன்பிடி துறைமுகத்தின் கட்டுமானப் பணியை ஆய்வு செய்து, பணிகளை உரிய காலத்தில் தரத்துடன் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் எஸ்பிளனேடு சாலை, பிரகாசம் சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார். அப்போது மழைநீர் வடிகால்களின் வண்டல் வடிகட்டித் தொட்டிகளை உரிய அளவீடுகளுடன் சுத்தம் செய்வதற்கு ஏதுவாக அமைத்திட அறிவுறுத்தினார்.

இதேபோல, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஈ.வெ.ரா. பெரியார் சாலையில் ரூ.3 கோடியே 75 லட்சத்தில் முடிவுற்ற மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.53 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள மாணவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்கும் விடுதிக்கான இடத்தையும் பார்வையிட்டு பணிகளை விரைவில் தொடங்க உத்தரவிட்டார்.

அப்போது எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story