உரிமம் இன்றி கழிவுநீர் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை


உரிமம் இன்றி கழிவுநீர் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
x

உரிமம் இன்றி கழிவுநீர் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் சுமா தெரிவித்தார்.

செங்கல்பட்டு

மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் கழிவுநீரை அகற்றும் தனியார் வாகன உரிமையாளர்கள் பொதுமக்களிடம் இருந்து அதிக அளவு தொகையை கட்டணமாக வாங்கி கொண்டு அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு முறையான விதிமுறைகளை பின்பற்றாமல் கழிவுநீர் தொட்டி உள்ளே சுத்தம் செய்ய இறங்கும் தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு மாங்காடு நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கு உரிமம் கட்டாயம் என்ற முறை வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் நகராட்சியில் உரிமம் பெற்ற வாகன ஓட்டிகள் மட்டுமே இந்த பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

தவறும் வாகன உரிமையாளர்கள் மீது அபராதம், சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்:-

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவு மேலாண்மை தேசிய கொள்கையின்படி உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை வழங்குவதற்காக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் மற்றும் மலக்கசடு, கழிவுநீரை வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி கழிவுநீர் அகற்றும் லாரிகள் மற்றும் டிரெய்லர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022-ஆம் ஆண்டு புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமம் அவர் விண்ணப்பித்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.

அதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம் இவ்வாறு லைசென்ஸ் பெற்ற கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் வாகன உரிமையாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும்.

உரிமம் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நகராட்சி நிர்வாகத்தால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் அது போன்ற நபர்கள் மீது கோர்ட்டு உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story