உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை


உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
x

தனியார் விற்பனை நிலையங்களில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அனுசுயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது ராபி பருவ பயிர்சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. இந்த பருவத்தில் பயிர்சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்களிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி யூரியா 2 ஆயிரத்து 105 டன், சூப்பர் பாஸ்பேட் 724 டன், பொட்டாஷ் 1,085 டன், டி.ஏ.பி. 1,275 டன், காம்ப்ளக்ஸ் 5 ஆயிரத்து 187 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை யூரியாவுக்கு ரூ.266.50-ம், 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை பொட்டாசுக்கு ரூ.1,700-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே போல் மற்ற உரங்களுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பட்டியல் தனியார் உர விற்பனை நிலையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த விலைப்பட்டியலின் அடிப்படையில் தான் உரங்கள் விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலை வைத்து தனியார் உர விற்பனை நிலையங்கள் உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விலைப்பட்டியலை விவசாயிகள் பார்க்கும் வகையில் விற்பனை நிலையங்களில் வைக்க வேண்டும். இந்த நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று வேளாண்மை உதவி இயக்குனர் உமா மற்றும் அதிகாரிகள் மூலம் அவ்வப்போது ஆய்வு நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story