சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை


சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Oct 2023 11:15 PM GMT (Updated: 26 Oct 2023 11:15 PM GMT)

பழனியில் சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

திண்டுக்கல்

பழனி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு அவை தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பழனியில் சாலையோரங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் சாலை, சிவகிரிபட்டி பைபாஸ் சாலை, இ.எஸ்.ஐ. சாலை ஆகிய சாலைகளின் ஓரங்களில் ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தப்படும் ஊசிகள், மருந்துகள், காயங்களை தூய்மைப்படுத்திய பஞ்சுகள் ஆகியவை கொட்டப்படுகின்றன.

சாலையோரத்தில் இதுபோன்று குப்பைகளை கொட்டுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. அந்த வகையில் பழனி காலேஜ்மேடு அருகே இ.எஸ்.ஐ. சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் அதிகமாக கொட்டப்பட்டு வருகிறது. இதில், சில நேரங்களில் மருந்துடன் கூடிய ஊசிகள், ரத்த பஞ்சுகள் குப்பைகளில் கிடக்கின்றன. இதனை குழந்தைகள் எடுத்து விளையாடுவதால் நோய் பரவுகிறது. எனவே மருத்துவக்கழிவுகளை கொட்டும் ஆஸ்பத்திரிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படியே குப்பைகள் கையாளப்படுகிறது. மருத்துவ கழிவுகள் அனைத்தும் சட்டப்படி அதற்கான மேலாண்மை நிறுவனங்களிடம் கொடுத்து அப்புறப்படுத்த வேண்டும். எனவே பழனியில் நோய் பரவும் வகையில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story