உரிமம் இன்றி உணவு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை


உரிமம் இன்றி உணவு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:46 PM GMT)

உரிமம் இன்றி உணவு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்

விழிப்புணர்வு கூட்டம்

நாகையில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு விற்பனையாளர்கள் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் உரிமம், பதிவுச் சான்று முகாம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஓட்டல் மற்றும் பேக்கரி உணவக சங்க நகரத் தலைவர் முருகையன் முன்னிலை வகித்தார்.

உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

அதிகரிப்பு

சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. உணவு விற்பனை நிறுவனங்கள் மீது புகார்களும் அதிகம் வரத் தொடங்கியுள்ளன. உணவு விற்பனை நிலையங்களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.

ஓட்டல்களில் கோழி, ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். பழைய மற்றும் சமைத்து மீதமாகும் அசைவ உணவுகளை குளிர் பதனப் பெட்டிகளில் வைத்து மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

நெகிழிப்பைகள்

சைவ மற்றும் அசைவ உணவு தயாரிப்பில் செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக் கூடாது. அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் பலகாரங்கள் வைத்து விற்பனை செய்யக்கூடாது.

தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளில் சட்னி, சாம்பார், குருமா, காப்பி, டீ போன்றவற்றை கட்டி விற்பனை செய்யக்கூடாது. புளித்துப்போன மற்றும் கெட்டுப்போன நிலையில் தயிர், மோர் மற்றும் தேங்காய் சட்னி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.

கடும் நடவடிக்கை

உபயோகப்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. மீதமாகும் உணவு எண்ணெய் பயோ டீசல் தயாரிப்புக்கு வழங்கிட வேண்டும். அனைத்திற்கும் மேலாக உணவு பாதுகாப்புத்துறை உரிமம், பதிவுச் சான்று இல்லாமல் யாரும் உணவு விற்பனை செய்ய கூடாது. இதை மீறி விற்பனை செய்தால் அனைத்து உணவு விற்பனை நிலையங்கள் மீதும் வழக்குபதிவு செய்தல், அபராதம் விதித்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கூட்டத்தில் ஓட்டல், டீக்கடை, பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், இட்லி கடை, சாலையோர உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் 20-க்கும் மேற்பட்டோர் உணவு பாதுகாப்புத்துறை பதிவுச் சான்று வேண்டி விண்ணப்பம் அளித்தனர்.


Next Story