தலைவர்கள் கொடியேற்றுவதில் மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை
குடியரசுதினத்தன்று கிராம ஊராட்சிகளில் தலைவர்கள்தான் தேசிய கொடியேற்ற வேண்டும், இதில் மாற்றம் செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்
கள்ளக்குறிச்சி
கலந்தாய்வு கூட்டம்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளி கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) ரத்தினமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
குறிப்பிட்ட காலத்துக்குள்...
கிராமங்களில் அனைத்து வளர்ச்சி பணிகளையும் குறிப்பிட்ட காலத்துக்குள் தரமாக அமைத்து முடிக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சில கடமைகளும், பொறுப்புணர்வுகளும் உள்ளது. அதை கடைப்பிடித்து பணியாற்ற வேண்டும். பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ள கிராம ஊராட்சிகளில் பெண்கள் சுதந்திரமாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும். ஊராட்சிகளில் பெண் தலைவர்களின் கணவர், மகன்கள் அல்லது உறவினர்கள் தலையீடு இருக்கக் கூடாது.
ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் கிராம கணக்குகளை தலைவர்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கும் வளர்ச்சிப் பணிகளில் முதலில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அடுத்து தெருவிளக்கு, சாலை வசதி மற்றும் பொது சுகாதார பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
கடும் நடவடிக்கை
ஊராட்சிகளில் வசூலிக்கப்படும் வீட்டு வரி, தொழில் வரி மற்றும் இதர வரிகளை முழுமையாக வசூலித்து அதை கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். குடியரசு தினத்தன்று கிராம ஊராட்சிகளில் தலைவர் மட்டுமே கொடியேற்ற வேண்டும். இதில் மாற்றம் செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் செயலாளருடன் கிராம வளர்ச்சி குறித்து கலந்து ஆலோசித்து ஒற்றுமையுடன் அனைத்து வளர்ச்சிப்பணிகளையும் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் மாதந்தோறும் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ஆறுமுகம், ஜெகநாதன், இந்திராணி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.