கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க மண்எண்ணெயுடன் வந்தால் கடும் நடவடிக்கை
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெயுடன் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கோரிக்கை மனு கொடுக்க வரும் மக்கள் மண்எண்ணெய் அல்லது பெட்ரோலுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்வது அடிக்கடி நடக்கிறது. அவ்வாறு தீக்குளிக்க முயற்சி செய்வோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். எனினும் மக்கள் மண்எண்ணெய், பெட்ரோலுடன் வருவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் தீக்குளிக்க முயற்சி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில், திண்டுக்கல் மாவட்ட மக்கள், கலெக்டரை சந்தித்து கொடுக்கும் புகார் மனுக்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. ஆனால் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வரும்போது சிலர் மண்எண்ணெய், பெட்ரோல் கேன்களை எடுத்து வந்து தீக்குளித்து உயிரை மாய்த்து கொள்ள போவதாக கூறுகின்றனர்.
இதுபோன்று வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று முன்தினம் நிலப்பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேன்களுடன் வந்த 2 பேர் மீது தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர், என்றார்.