வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்தர்மபுரியில் இன்று நடக்கிறது
தர்மபுரி:
தர்மபுரி வக்கீல் சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்கத் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் தர்மபுரியில் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டு குழு நிறைவேற்றியுள்ள தீர்மானங்களின்படி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) தர்மபுரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என்று இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டு குழு தலைவர் மீது பார் கவுன்சில் எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும். தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடத்தில் இயங்கி வரும் நீதிமன்றங்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.