கெங்கவல்லி அருகே ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் போராட்டம்


கெங்கவல்லி அருகே ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 July 2023 2:00 AM IST (Updated: 5 July 2023 1:26 PM IST)
t-max-icont-min-icon

கெங்கவல்லி அருகே ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

சேலம்

கெங்கவல்லி

கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சியில் பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் சித்தேரி பகுதியில் நேற்று தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 170 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு சென்ற ஒரு சிலர், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் மூலமாக பதிவு அட்டைக்கு சீல் வைக்கப்படுகிறது. இந்த சீல் வைத்தவர்கள் மட்டும் தான் 100 நாள் வேலை செய்ய முடியும் என்று கூறியுள்ளனர்.

இதனால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைகள் செய்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் திடீரென்று வேலையை நிறுத்தி விட்டு ஆத்தூர்-திருச்சி சாலையோரம் வந்து நின்றனர். உடனடியாக கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் தாமரைச்செல்விக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் சக அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரசம் பேசினார். அப்போது அவர் கூறும் போது, அனைவருக்கும் வேலை உண்டு. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தமிழக அரசு 100 நாள் வேலை முழுமையாக தர வேண்டும்.

அனைவருக்கும் 100 நாள் வேலை என்றாலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக 100 நாள் வேலை வாய்ப்பு தர வேண்டும் என்று தமிழக அரசு கூறியதனால் அவர்களுக்கு சீல் வைத்து அட்டை தரப்படுகிறது. ஆனால் அனைவருக்கும் 100 வேலை உள்ளது' என்றார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.


Next Story