கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மல்லசமுத்திரம் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. உறுப்பினர் தலா ஒருவரும், மற்ற 13 வார்டுகளிலும் தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளனர். பேரூராட்சி தலைவராக 3-வது முறையாக தி.மு.க.வை சேர்ந்த திருமலை என்பவர் உள்ளார். இவர் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளாக மற்ற கவுன்சிலர்களின் வார்டுகளை புறக்கணிப்பதாகவும், அவசர தேவைகளுக்காக கூட எந்த வேலையும் செய்து தரப்படவில்லை எனவும், மேலும் இவர் அரசு ஒதுக்கும் நிதிia எவ்வாறு செலவு செய்கிறார் என்பதற்கான எந்த கணக்கும் பேரூராட்சி உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது. இதில் 1-வது வார்டு பா.ம.க. உறுப்பினர் சரவணன், 10-வது வார்டு உறுப்பினர் லட்சுமி ரவி, 12-வது வார்டு உறுப்பினர் மேனகா ஆனந்த், 13-வது வார்டு உறுப்பினர் முருகேசன், 14-வது வார்டு உறுப்பினர் சசிகலா கதிர்வேல், 15-வது வார்டு உறுப்பினர் ஞானசவுந்தரி அருள்மொழி மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர் தங்கமணி குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். தீர்மானம் புத்தகத்தில் கையெழுத்து பெற வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு தலைவர் திருமலை, செயல் அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து கவுன்சிலர்கள் 6 பேரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சேலம் மண்டல உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கணேஷ்ராம் நேரில் வந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். இதனால் பேரூராட்சி அலுவலக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






