அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
x

நாமக்கல்லில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பாண்டிமாதேவி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் காந்திமதி, ஜெயமணி, குர்ஷித், அம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்கொடி, மாவட்ட செயலாளர் பிரேமா, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி, மாவட்ட தலைவர் அசோகன், துணை செயலாளர் சிவராஜ் ஆகியோர் போராட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

இதில் அங்கன்வாடி பணியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பிரதான மையங்களை மினி மையமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியில் உள்ள அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மாலை தொடங்கிய அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டமானது, இரவிலும் நீடித்தது. இதனிடையே கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்ததன் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story