தூய்மை பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டம்
பொத்தனூர் பேரூராட்சி முன்பு தூய்மை பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமத்திவேலூர்
பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் பேரூராட்சி கடந்த ஆண்டு மாநில அளவில் சிறந்த பேரூராட்சிக்கான விருதை பெற்றது. இந்த பேரூராட்சியில் தூய்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கவில்லை எனவும், தற்போது ஏற்கனவே வழங்கி வந்த சம்பளத்தொகையை குறைத்துள்ளதாகவும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பணி செய்வதற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும் கூறி தொழிலாளர்கள் நேற்று காலை பணிக்கு செல்லாமல் பேரூராட்சி அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி தலைவர் கருணாநிதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதியத்தை மீண்டும் வழங்கப்படும் என உறுதியளித்தனர். அதைத்தொடந்து தூய்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர்.