பேராசிரியரை கைது செய்யகோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


பேராசிரியரை கைது செய்யகோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

ராசிபுரத்தில் கல்லூரி மாணவியை சில்மிஷம் செய்த பேராசிரியரை கைது செய்யகோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் துறை பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் சுந்தரமூர்த்தி. இவர் சில நாட்களுக்கு முன்பு இயற்பியல் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த மாணவி ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் மகளிர் போலீசார் பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பேராசிரியரை கைது செய்யக்கோரி கல்லூரியில் படித்து வரும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமையில் கல்லூரியில் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் இந்திய மாணவர் சங்கதலைவர் தங்கராஜை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து தங்கராஜை விடுதலை செய்யக்கோரி இந்திய மாணவர் சங்க மாணவர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த போலீசார் சங்க தலைவர் தங்கராஜை மீண்டும் கல்லூரியில் கொண்டு போய் விட்டனர். அதன்பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story