ரேஷன், ஆதார் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்
ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் ரேஷன், ஆதார் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்
ஸ்ரீமுஷ்ணம்
ஸ்ரீமுஷ்ணம் அருகிலுள்ள மேலப்பாளையூர் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 3 தலைமுறையாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2000-ம் ஆண்டு அரசு பட்டா வழங்கியது. 20 ஆண்டுகளுக்குக்கும் மேலாக அரசு பதிவேட்டில் திருத்தம் செய்து தனி பட்டா வழங்கவேண்டும் என்று பலமுறை மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் அரசு செவிசாய்க்காததால் கடந்த மாதம் 22-ந் தேதி தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி மக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
ஆனால் இதுநாள் வரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மேலப்பாளையூர் கிராமமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை துணை தாசில்தார் சிவகண்டனிடம் ஒப்படைத்தனர்.
அப்போது அவர்களை சமாதானம் செய்த துணை தாசில்தார், இந்த பிரச்சினை குறித்து வருகிற 27-ந் தேதி(வியாழக்கிழமை) தாலுகா அலுவலகத்தில் நடைபெற உள்ள சமாதான கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று கூறினார். இதையடு்த்து போராட்டத்தை கைவிட்ட கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.