பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடங்கியது


பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடங்கியது
x

திருவள்ளூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் உள்ள 'சேக்ரேட் ஹார்ட்' அரசினர் உதவி பெறும் பள்ளியில் பயின்ற சரளா (வயது 17) என்ற பிளஸ்-2 மாணவி கடந்த 25-ந் தேதியன்று பள்ளி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மாணவி சரளா இறப்பு தொடர்பாக சந்தேகம் இருப்பதாக மாணவியின் சகோதரர் சரவணன் மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மேற்பார்வையில் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் பள்ளி மாணவியின் மரணம் குறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மாணவியின் உடல் நேற்று முன்தினம் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டநிலையில், சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையிலான போலீசார் நேற்று முதற்கட்ட விசாரணையை தொடக்கும் விதமாக பள்ளி வளாகத்திற்கு சென்றனர். அங்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் விடுதி காப்பாளர், விடுதியில் தங்கியுள்ள மாணவியர்கள், அவரது பெற்றோர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக கீழச்சேரி பகுதியில் முன்னெச்சரிக்கையாக அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் பள்ளி வளாகம் மற்றும் விடுதி அருகே துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர், மேலும் பள்ளி வளாகத்தில் கண்ணீர் புகை குண்டு வாகனமும், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனமும் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Next Story