கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்; பேராசிரியர்கள், பெற்றோர் கருத்து


கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்; பேராசிரியர்கள், பெற்றோர் கருத்து
x

கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர் என்று பேராசிரியர்கள், பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர்

பிளஸ்-2 படிப்பை முடித்து கொண்டு கல்லூரிகளில் கால் எடுத்து வைக்கையில் என்ன படிப்பு படிக்கலாம்? எந்தப் பிரிவில் சேர்ந்து படித்தால் எளிதில் வேலை கிடைக்கும்? என்பன போன்ற எந்த விவரமும் எல்லா மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிகம் தெரிவது இல்லை. இதனால் பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகள் விரும்பும் பாடப்பிரிவில் அல்லது தாங்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்த்து விடுகின்றனர்.

இந்தநிலையில் எந்தப் பாடப்பிரிவு எடுத்துப் படித்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்பது குறித்து இங்கு பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள...

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை-அறிவியல் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) சேகர்:- என்ஜினீயரிங் படிப்பு படிக்க 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. கலை-அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளநிலை படிப்பு உள்ளது. தற்போது மத்திய-மாநில அரசு போட்டி தேர்வுகளுக்கு பெரும்பாலானவைக்கு 3 ஆண்டு பட்டப்படிப்பு இருந்தால் போதுமானது. இதனால் கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடப்பிரிவுகள் படித்தால் டி.என்.பி.எஸ்.சி. போன்ற ேபாட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் அந்த பாடப்பிரிவுகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டுகின்றனர். பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல் படித்தால் என்ஜினீயரிங் படித்து செல்லும் மென்பொருள் நிறுவனம் உள்ளிட்டவைக்கு வேலைக்கு செல்லலாம்.

கொரோனா காலத்திற்கு பிறகு பி.எஸ்சி. கணிதம் படிக்கக்கூடிய மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏனென்றால் கஷ்டப்பட்டு படிப்பதற்கு மாணவ-மாணவிகள் விரும்புவதில்லை. இதனால் கல்லூரிகளில் கணிதம் பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. பி.எஸ்.சி. கணினி அறிவியல் படிக்க விரும்புகின்றனர். பி.காம், பி.பி.ஏ. பாடப்பிரிவுகளுக்கு கலை கல்லூரிகளில் அதிக மவுசு உள்ளது. அந்த படிப்பு படித்தால் வணிக நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லலாம். முன்பெல்லாம் பி.காம் படித்தால் வங்கி பணிக்கு செல்லலாம் என்று இருந்தது. தற்போது வங்கி பணிக்கு என்ஜினீயரிங் படித்தவர்கள் எளிதாக சென்று விடுகிறார்கள். அறிவியல் பாடப்பிரிவுகளை படிப்பவர்கள், மேற்கொண்டு பி.எட். முடித்து விட்டு ஆசிரியர் பணிக்கு செல்கின்றனர்.

தற்போது தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் அரசு ஆசிரியர் பணி கிடைக்காமல் உள்ளனர். பி.எஸ்சி. பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி முடித்தால் வெளிநாட்டில் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. எங்கள் கல்லூரியில் பி.காம், பி.ஏ. தமிழ், பி.எஸ்சி. கணினி அறிவியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை அதிகமாக வந்துள்ளது. மாணவ-மாணவிகள் எடுக்கும் பாடப்பிரிவில் ஆர்வத்துடன், திட்டமிட்டு படித்தால் அந்த துறையில் சாதிக்கலாம்.

வேலை வாய்ப்புகள்

வேப்பந்தட்டையை சேர்ந்த மாணவர் சுதாகர்:- என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு படிக்கும் மாணவர்கள், படிப்புக்கேற்ற வேலை வாய்ப்பு தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது. ஆனால் பி.காம்., பி.பி.ஏ. போன்ற படிப்புகளில் சேர்ந்து படித்தால், வியாபார நிறுவனம் மற்றும் நிறுவனங்களில் ஆடிட்டிங் பிரிவுகளில் வேலை வாய்ப்பு அதிகமாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தற்போது தொழில் செய்யும் அனைவரும் ஜி.எஸ்.டி. மற்றும் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்கின்றனர். அதனால் பி.காம். போன்ற படிப்புகளுக்கு தற்போது வேலை வாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்கிறது. பி.பி.ஏ., எம்.பி.ஏ. படித்தால் புதிய தொழில்கள் தொடங்கவும், பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் பெறவும் அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிப்பதால் செலவும் குறைவாகவே ஆகிறது.

போட்டி அதிகம்

விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த மாணவர் நித்திஷ்:- நான் அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. (இயற்பியல்) படிப்பில் சேர்ந்துள்ளேன். இன்றைய சூழலில் பிளஸ்-2 முடித்த பின்பு அதிகமான மாணவ, மாணவிகள் பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் சார்ந்த படிப்புகளை படிப்பதை விட, தற்போதைய வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி. போன்ற படிப்புகளையே அதிகமாக தேர்ந்தெடுக்கின்றனர். ஏனென்றால் மற்ற படிப்புகளை விட கலை, அறிவியல் படிப்புகளை படித்து விரைவில் வேலைக்கு சென்றவர்கள் அதிகமாக உள்ளனர். ேமலும் பட்டப்படிப்பை முடித்த பின்பு போட்டி தேர்வுகளை எழுதி, அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கமே கலை மற்றும் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. இதேபோல் பலரும் கலை மற்றும் அறிவியல் படிப்பை படிக்க விரும்புகின்றனர். இதனால் அறிவியல் பிரிவில் அதிகமான போட்டிக்கு மத்தியில் எனக்கு இடம் கிடைத்துள்ளது.

விருப்பமில்லை

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வையங்குடியை சேர்ந்த ஜெயப்பிரியா:- நான் பிளஸ்-2 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றேன். தற்போது கல்லூரியில் நான் பி.ஏ. தமிழ் எடுத்து படிக்க உள்ளேன். பட்டப்படிப்பை தொடர்ந்து எம்.ஏ. அல்லது சட்டம் பயில வேண்டும். ேமலும் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கலெக்டராக வேண்டும் என்பது விருப்பம். அந்த நோக்கத்தில்தான் அரசு இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்து பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அரசு மகளிர் கலை கல்லூரியில் சேர்ந்துள்ளேன். என்ஜினீயரிங் மற்றும் மருத்துவம் படிக்க என்னை பலர் வற்புறுத்தியும், எனக்கு விருப்பமில்லை. எனது விருப்பத்தை எனது தந்தை நிறைவேற்றியுள்ளார். எனது நண்பர்கள் பலரும் கலைக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.


Next Story