திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுவதால் மழை, வெயிலில் அவதிப்படும் மாணவிகள்
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு மரத்தடி, கலையரங்கம் ஆகிய பகுதிகளில் வகுப்புகள் நடைபெறுவதால் மழையிலும், வெயிலிலும் அவர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு மரத்தடி, கலையரங்கம் ஆகிய பகுதிகளில் வகுப்புகள் நடைபெறுவதால் மழையிலும், வெயிலிலும் அவர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நகராட்சி பெண்கள் பள்ளி
திருவண்ணாமலை தேரடிவீதியில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி 1948-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டு 1951-ல் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் 1978-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த பள்ளியில் திருவண்ணாமலை நகராட்சி பகுதியை சேர்ந்த மாணவிகள் மட்டுமின்றி நகரின் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஊராட்சி பகுதிகளை சேர்ந்த மாணவிகளும் பயின்று வருகின்றனர். சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும் மாணவிகள் வந்து இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த கல்வியாண்டில் இந்த பள்ளியில் சுமார் 4 ஆயிரத்து 144 மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளயில் 40 மாணவிகளுக்கு ஒரு வகுப்பறை என்று கணக்கிட்டாலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் இருக்க வேண்டும். ஆனால் வெறும் 43 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. போதிய கழிவறை வசதியும் இல்லை என்று கூறப்படுகின்றது. வகுப்பறைகள் பற்றாகுறை காரணமாக பள்ளியில் பெரும்பாலான வகுப்புகள் பள்ளி வளாகத்தில் மரத்தடியிலும், கலையரங்கத்திலும், கூடைப்பந்து மைதானத்தில் நிழலாக உள்ள பகுதியிலும் நடத்தப்படுகின்றது.
கூடுதல் வகுப்பறைகள்
கடந்த சில தினங்களாக திருவண்ணாமலை பரவலாக மழை பெய்து வருகின்றனர். பகல் நேரத்தில் மழை பெய்ததால் வகுப்பறை இல்லாமல் வெளியில் அமர்ந்து படிக்கும் மாணவிகள் அங்குள்ள போர்ட்டிகோவில் தஞ்சம் அடைகின்றனர்.
மழை மட்டுமின்றி வெயில் சமயத்திலும் மாணவிகள் அனல் காற்றின் கொடுமை தாங்க முடியாமல் வெளியில் அமர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு ஆய்வுக்கு வந்த சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் இந்த பள்ளியையும் ஆய்வு செய்தனர். அப்போது இந்த பள்ளி கடந்த சில வருடங்களாக 100 சதவீதத்திற்கு மேல் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை செய்யப்பட்டு உள்ளதாக அந்த குழுவின் தலைவர் செல்வபெருந்தகை பாராட்டி பேசினார்.
மேலும் இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே பள்ளி மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
புதியதாக மேல்நிலைப்பள்ளி
மேலும் இந்த பள்ளிக்கு திருவண்ணாமலை அருகில் உள்ள வேங்கிக்கால், மங்கலம், ஆடையூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்தும் மாணவிகள் வருகின்றனர். வேங்கிக்கால் என்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் அதிக வருவாய் வரும் மிக பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சி ஆளுகை பகுதியில் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய அலுவலகங்கள் உள்ளன.
எனவே வேங்கிக்கால் ஊராட்சி பகுதியில் கிராமப்புற மாணவிகள் பயிலும் வகையில் புதியதாக மேல்நிலைப்பள்ளி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.