மாணவிகள் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்


மாணவிகள் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:47 PM GMT)

மாணவிகள் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கடலூரில் நடந்த சமூக நீதி குறித்த விழிப்புணர்வு முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரை வழங்கினார்.

கடலூர்

கடலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முகாமுக்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி, பேசினார். அப்போது, பெண் குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்க கல்வி கற்க வேண்டும். பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு கல்வி தான் மிக முக்கியமானதாகும்.

படிக்கும் காலத்தில் தேவையில்லாத சிக்கல்களில் சிக்காமல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, படித்து வாழ்வில் முன்னேற வேண்டும். எதையும் எதிர்கொள்ளும் மன தைரியத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

பரிசு

தொடர்ந்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கற்றலை சிதைக்கும் சிக்கல்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். முன்னதாக 2 மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்களை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். முகாமில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கோமதி, குழந்தைகள் நலக்குழு துர்கா, சைல்டு லைன் டெனிதா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தீபா, கவிதா, தாரகேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலச்சந்தர், ஜோதி மற்றும் போலீசார், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story