நீட் தேர்வை கண்டு மாணவர்கள் அச்சப்படக்கூடாது - அண்ணாமலை பேச்சு
நீட் தேர்வை கண்டு மாணவர்கள் அச்சப்படக்கூடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல்லில் இலவச நீட் பயிற்சி வகுப்புகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நீட் பயிற்சி கையேடுகளை வழங்கினார்.
அதன் பின்னர் அவர் பேசியதாவது:-
நீட் தேர்வை இந்தியாவில் 18 லட்சம் பேரும், தமிழகத்தில் 1.42 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் இது கடந்தாண்டை காட்டிலும் 30 ஆயிரம் அதிகம். இதனால் இந்த வருடம் தமிழகத்திற்கு சாதனை வருடம்.
ஒரே தேர்வு எழுதினால் அனைத்து மருத்துவக்கல்லூரியிலும் சேர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு வந்த பிறகுதான் மிகவும் பின்தங்கிய பகுதியில் இருக்கும் மாணவர்களும் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். நீட் மூலம் அனைவருக்கும் சம வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டு நீட் எழுதியதில் 58 சதவீதம் என்பது இந்திய அளவில் தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளனர். வாழ்க்கை என்பதே ஒரு பரீட்சைதான். மாணவர்கள் நீட் தேர்வைப் பார்த்து பயப்படக்கூடாது. ஒழுக்கம், மன உறுதி, கடின உழைப்பு, விடாமுயற்சியோடு படித்தால் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறமுடியும். நீட் தேர்வை எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும், வருங்கால மருத்துவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.