வருகிற கல்வி ஆண்டில் மாணவர்கள் இடை நிற்றல் இருக்கக்கூடாது-மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை
வருகிற கல்வி ஆண்டில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இடைநிற்றல் இருக்க கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா தெரிவித்தார்.
மீளாய்வு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வுக்கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கல்வி மேலாண்மை தகவல் மைய இணைய தளத்தில் (எமிஸ்) ஒவ்வொரு நாளும் செய்யக்கூடிய பணிகளில் தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும். பள்ளி மேலாண்மைக்கூட்டங்களில் பங்கேற்பவர்களின் வருகையினை உறுதி செய்ய வேண்டும். வரும் கல்வி ஆண்டில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இடைநிற்றல் இருக்க கூடாது. அந்த அளவிற்கு ஒவ்வொரு மாணவரும் பள்ளிக்கு வருகை புரிவதை உறுதி செய்ய வேண்டும்.
100 சதவீதம் தேர்ச்சி
வருகிற கல்வி ஆண்டில் அரசுப்பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் 100 சதவீதம் தேர்ச்சி அடையத்தக்க வகையில் கல்வியாண்டின் தொடக்கம் முதல் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பான வழிகாட்டலை செய்ய வேண்டும். வருகிற 31- ந்தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் செய்து தினந்தோறும் எமிஸ் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பணியினை சுமையாக கருதாமல் சுகமாக கருதி பணி செய்து பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் சிறப்பான வழிகாட்டலை செய்து அடுத்து வருகிற உடனடித் தேர்வில் பங்கேற்று அதில் வெற்றி பெற்று அவர்கள் உயர்கல்வி தொடர வழிகாட்டிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இக்கூட்டத்தில் பிளஸ்-2 வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் மீளாய்வு செய்தார். பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக்கல்வி அதிகாரி பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அதிகாரி ரமேஷ், அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் (பொறுப்பு) முருகேசன், தேர்வுத்துறை உதவி இயக்குனர் தமிழரசன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.