வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக அனுமதிக்க வேண்டும் - மநீம


வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக அனுமதிக்க வேண்டும் - மநீம
x

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக அனுமதிக்க வேண்டும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளிருப்புப் பயிற்சி (Internship) மருத்துவர்களாக சேர தமிழக அரசு ஆணை பிறப்பிக்காததால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பல்வேறு நோய்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், தற்போதுள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை என்பதே நிதர்சனம். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக, கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ளது.

ஏராளமான மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயில விருப்பம் இருந்தாலும், நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் இந்தியாவில் மருத்துவக் கல்வி பயில எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல லட்சம் கட்டணம் செலுத்திப் படிக்கவும் பெரும்பாலானவர்களிடம் வசதி இல்லை. இதனால், குறைந்த செலவில் மருத்துவம் பயில விரும்பும் ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உக்ரைன், சீனா, ரஷ்யா, ஃபிலிப்பைன்ஸ், உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்கள் அல்லது மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து, மருத்துவம் பயில்கின்றனர். எனினும், அவர்கள் தாயகம் திரும்பி, மருத்துவராகப் பணிபுரிவதில் பல்வேறு பிரச்சனைகள் நிலவுகின்றன.

இந்நிலையில், வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள், இந்தியாவில் அயல்நாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வில் (FMGE -Foreign Medical Graduate Examination) தேர்ச்சி பெற்று, ஒராண்டு கட்டாய மருத்துவப் பயிற்சி மேற்கொண்டால், தங்களை மருத்துவர்களாகப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், பல்வேறு மாநிலங்களில் தற்போது பயிற்சி மருத்துவராகப் பணிபுரியும் சூழலில், தமிழகத்தில் மட்டும் இப்பயிற்சிக்கு காலதாமதம் செய்யப்படுகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் அயல்நாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டு, 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி மருத்துவராகப் பணிபுரியக் காத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் இரண்டு அறிவிப்புகளை எழுத்துப்பூர்வமாகவே வெளியிட்டிருந்தார். உள்ளிருப்பு பயிற்சி பெற தடையில்லாத சான்றிதழ் வழங்க தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் இதுவரை வசூலிக்கப்பட்டுவந்த கட்டணமான ரூ.3.54 லட்சம் கட்டணமானது 01.02.2022 முதல் ரூ.29500/ ஆக குறைக்கப்படும் என்பதும், உள்ளிருப்புப் பயிற்சிக் கட்டணமாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர வசூலிக்கப்பட்டுவந்த கட்டணமான ரூ.2 லட்சமானது முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு கட்டணம் ஏதுமில்லாமல் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பதுமே அந்த இரண்டு அறிவிப்புகள்.

இதில், முதல் அறிவிப்பான ரூ.3.54 லட்சம் கட்டணமானது ரூ.29500 ஆகக் குறைப்பு என்பதை தமிழக அரசு அமல்படுத்திவிட்டது என்பது வரவேற்புக்கும், பாராட்டுக்கும் உரியது. ஆனால், இரண்டாவது அறிவிப்பான ரூ.2இலட்சம் கட்டண ரத்து குறித்து இன்னும் அரசாணை வெளியிடப்படாததால் இன்னும் இவ்வறிவிப்பு செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதனால், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று, பயிற்சி மருத்துவராகும் வாய்ப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள் பரிதவிக்கும் சூழல் நிலவுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு, வெளிநாடுகளில் பயின்ற மருத்துவ மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உடனடியாக உள்ளிருப்புப் பயிற்சி மருத்துவராகப் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். குறிப்பாக, ரூ.2லட்சம் கட்டண ரத்து தொடர்பான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. இந்த விவகாரம் மற்றும் இதனோடு தொடர்புடைய விவகாரங்களில் நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 02.09.2021 அன்று மக்கள் நீதி மய்யமானது விரிவான அறிக்கை மூலம் வலியுறுத்தியிருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story