ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மேலாண்மை இயக்குனர் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலாண்மை இயக்குனர் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 30 திட்ட பகுதிகளில் 11 ஆயிரத்து 890 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் 1,184 குடியிருப்புகள் முடிவுற்று 997 பேருக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டு உள்ளனர். பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 7 ஆயிரத்து 689 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 6 ஆயிரத்து 316 கட்டிட பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் நேற்று முன்தினம் கோபி அருகே அளுக்குளி பகுதியில் கட்டப்பட்டு உள்ள 288 குடியிருப்புகளை ஆய்வு செய்து, ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பு தாரர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின்னர் குறைகளை உடனடியாக சரிசெய்து கொடுக்கும்படி அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார். மேலும் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் அருகாமையில் உள்ள ரேஷன் கடை பற்றிய விவரங்களையும் பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார்.
விற்பனை பத்திரம்
இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பவானி ரோடு பகுதி -1 திட்ட பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் 336 குடியிருப்புகள் கட்டும் பணிகளையும் மேலாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார். பின்னர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் பெரும்பள்ளம் ஓடை, கருங்கல்பாளையம் மற்றும் பெரியார் நகர் திட்ட பகுதிகளில் கட்டப்பட்டு உள்ள 1,072 குடியிருப்புகளை ஆய்வு செய்து குடியிருப்புகளை பயனாளிகளிடம் விரைவில் ஒப்படைக்க வீட்டு வசதி வாரிய துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள ஆலமரத்து மேடு திட்டப்பகுதியில் ஆய்வு செய்து மக்களிடம் கலந்துரையாடி நிலுவை தொகையினை செலுத்தி விற்பனை பத்திரங்களை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தார். மேலும் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்ட பணிகளையும் அவர் நேற்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அவருடன், மேற்கு மண்டல தலைமை பொறியாளர் ராஜசேகரன், மேற்கு சரக மேற்பார்வை பொறியாளர் நஞ்சப்பன் உள்பட பலர் இருந்தனர்.