போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆயுதப்படைக்கு இடமாற்றம்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆயுதப்படைக்கு இடமாற்றம்
x
தினத்தந்தி 21 July 2023 8:04 PM GMT (Updated: 23 July 2023 10:25 AM GMT)

சேலத்தில் ஓட்டலில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து சூப்பிரண்டு சிவக்குமார் நடவடிக்கை எடுத்தார்.

சேலம்

சேலத்தில் ஓட்டலில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து சூப்பிரண்டு சிவக்குமார் நடவடிக்கை எடுத்தார்.

ஓட்டலில் ரகளை

சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு ரவுண்டானா பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஓட்டலுக்கு கடந்த 19-ந் தேதி இரவு 2 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் ஒருவர் அங்கிருந்த மேஜையில் தலை சாய்த்து தூங்கிவிட்டார். மற்றொருவர் அவர்கள் வந்த காருக்கு சென்று தூங்கினார்.

ஆனால் மேஜையில் தூங்கிய நபரை ஊழியர்கள் பலமுறை எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. பின்னர் ஓட்டல் உரிமையாளர், வாடிக்கையாளர் உதவியுடன் தூங்கியவரை எழுப்பி வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதற்குள் காரில் தூங்கியவர் இறங்கி வந்து மற்றொருவருடன் சேர்ந்து ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆயுதப்படைக்கு இடமாற்றம்

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் இருவரும் சேலம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி, ஏட்டு செந்தில்குமார் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் ஓட்டலில் ரகளை செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி, ஏட்டு செந்தில்குமார் ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து சூப்பிரண்டு சிவக்குமார் நடவடிக்கை எடுத்தார்.

மேலும் சம்பவம் தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லப்பாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story