தூய்மை பணியாளர்கள் 30 பேர் திடீர் பணி நீக்கம்; காத்திருப்பு போராட்டம்


தூய்மை பணியாளர்கள் 30 பேர் திடீர் பணி நீக்கம்; காத்திருப்பு போராட்டம்
x

ஜெயங்கொண்டம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் 30 பேர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி ஒப்பந்த பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

30 பேர் பணி நீக்கம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 113 தூய்மை பணியாளர்கள் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வந்தனர்.இந்தநிலையில் 30 தூய்மை பணியாளர்கள் கடந்த 30-ந் தேதி திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி ஜெயங்கொண்டம் நகராட்சி நுழைவுவாயில் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தூய்மை பணியாளர்கள் குழு தலைவி சிலம்பு செல்வி தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் இரவு அங்கு சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

காத்திருப்பு போராட்டம்

இதுகுறித்து ஏ.ஐ.டி.யு.சி. சம்மேளன மாநில செயலாளர் தண்டாயுதபாணி நிருபர்களிடம் கூறியதாவது:- ஜெயங்கொண்டம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களில் 85 சதவீதம் பேர் ஒப்பந்த பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் குறைந்தது 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் குறைவான ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் 25 பெண்கள், 5 ஆண்கள் என 30 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.ஏற்கனவே தூய்மை பணியாளர்களுக்கு 61 மாத அரியர்ஸ் நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும். சீருடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story