கூடுவாஞ்சேரி அருகே லாரியில் திடீர் தீ விபத்து
கூடுவாஞ்சேரி அருகே லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னையில் இருந்து பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கூடுவாஞ்சேரி அருகே செல்லும்போது திடீரென லாரியில் இருந்து கரும்புகை கிளம்பியது.
இதனை பார்த்த டிரைவர் உடனே லாரியை சாலையிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடினார்.
சிறிது நேரத்தில் கரும்புகை தீயாக மாறி லாரி முழுவதும் மளமளவென பயங்கரமாக கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. இதை பார்த்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் உடனடியாக மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் லாரி மற்றும் பஞ்சு மூட்டைகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனாலும் லாரி மற்றும் பஞ்சு மூட்டைகள் அனைத்தும் முழுமையாக எரிந்தன. லாரி எலும்புக்கூடு போல் காட்சியளித்தது. இது குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.