சாலை வசதி கேட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே சாலை வசதி கேட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம்
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரும்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் வடிகால் வசதியுடன் தார்சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, அரும்பட்டு கிராமத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சுரேஷ் மாரியம்மன் கோவில் தெருவில் வடிகால் வசதியுடன் சாலை வசதி செய்து தரக்கோரி உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மனு கொடுத்தார். அதன் பேரில் சாலை அமைப்பதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் இங்கு அமைக்க வேண்டிய சாலையை வேறு இடத்துக்கு மாற்றி போட்டுள்ளாா்கள். எங்கள் தெருவில் வடிகால், சாலை வசதி இல்லாததால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே வடிகாலுடன், சாலை வசதி கேட்டு போராடுகிறோம் என்றனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, நந்தகோபாலகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.