போலீசாரை கண்டித்து திடீர் சாலை மறியல்


போலீசாரை கண்டித்து திடீர் சாலை மறியல்
x

போலீசாரை கண்டித்து திடீர் சாலை மறியல் நடைபெற்றது.

திருச்சி

துவரங்குறிச்சி:

துவரங்குறிச்சியை அடுத்த அக்கியம்பட்டியை சேர்ந்தவர் ராமர்(வயது 40). இவர் கடந்த 28-ந் தேதி இரவு துவரங்குறிச்சி-மதுரை அணுகுசாலையில் தலையில் பலத்த காயத்துடன் கிடந்தார். இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், ராமரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதல் கட்ட விசாரணையில் ராமர் கொலை செய்யப்பட்டது தெரியவந்த நிலையில், தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராமர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று, வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சிலர் துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டரிடம் சென்று கேட்டபோது அவர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் துவரங்குறிச்சி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டித்தும், தரக்குறைவாக பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த மணப்பாறை போலீஸ் துணை சுப்பிரண்டு ராமநாதன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டனர். இந்நிலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வேனில் அழைத்து சென்றனர். இதனால் அவர்களை விடுவித்த பின்னரே ராமரின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கூறியதையடுத்து, அவர்களை போலீசார் விடுவித்தனர்.


Next Story