சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா போராட்டம்


சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா போராட்டம்
x

கார் மீது `ஸ்கேன்' தடுப்பு கட்டை விழுந்ததால் துவாக்குடி சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

துவாக்குடி சுங்கச்சாவடி

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா நேற்று முன்தினம் விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக தஞ்சைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவர் இரவு 11.45 மணி அளவில் திருச்சியை அடுத்த துவாக்குடி சுங்கச்சாவடியில் செல்லும் போது, சசிகலாவின் ஆதரவாளர்களின் 4 கார்கள் `ஸ்கேன்' செய்யப்பட்டு சென்றது. அதைத்தொடர்ந்து சசிகலாவின் கார் சென்றது. அப்போது, சசிகலாவின் கார் கண்ணாடியில் சுங்கச்சாவடி `ஸ்கேன்' கட்டை விழுந்தது. இதனிடையே டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் சசிகலாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

போராட்டம்

இதனால் கோபம் அடைந்த சசிகலா தனது காரை சிறிது தூரம் தள்ளி நிறுத்துமாறு கூறினார். அதன்படி அவரது கார் டிரைவர் காரை தள்ளி நிறுத்தினார். இதைத்தொடர்ந்து சசிகலாவின் ஆதரவாளர்கள் சுங்கச்சாவடியில் உள்ள கட்டண நுழைவுவாயில்களில் ஆங்காங்கே கார்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப்பார்த்து, அங்கு நின்று இருந்த சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர், தன்னை தாக்கி விடுவார்களோ என பயந்து அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சுங்கச்சாவடி மேலாளர் இங்கு வரவேண்டும். இந்த சுங்கச்சாவடியில் இதுபோல் ஏற்கனவே தனக்கு 3 முறை நடைபெற்றுள்ளது. தன்னை பழிவாங்கும் நோக்கில் இதுபோல் நடத்துகிறார்கள் என்ற சந்தேகம் உள்ளது என்று சசிகலா கூறியதாக தெரிகிறது.

பேச்சுவார்த்தை

அதனைத் தொடர்ந்து சசிகலாவின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலாளர் வரவில்லை என்றால் போராட்டம் தொடரும் என கூறினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இரவு ரோந்து பணியில் இருந்த திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், துவாக்குடி (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து சுங்கச்சாவடி மேலாளர் அமர்நாத்ரெட்டி சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, அவர் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து போலீசார், இந்த பிரச்சினை குறித்து எழுத்து பூர்வமாக புகார் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம் என கூறியுள்ளனர். அதற்கு சசிகலா தரப்பினர் புகார் கொடுப்பதாக கூறியுள்ளனர். ஆனால் சசிகலா காரை விட்டு இறங்காமல் காரில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் நள்ளிரவு 1.15 மணி அளவில் சசிகலா தரப்பினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் 1½ மணி நேரம் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

வி.ஐ.பி. வழியில் வரவில்லை

இதுகுறித்து சுங்கச்சாவடி தரப்பினர் கூறும்போது, சசிகலா வி.ஐ.பி. செல்லும் வழியில் வராமல் பொதுவான வழியில் வந்தார். அதனால் தான் இந்த பிரச்சினை நடந்து விட்டது என்றனர்.

சசிகலா ஆதரவாளர்கள் கூறும்போது, சசிகலா எப்போதும் வி.ஐ.பி. வழியாக வந்ததில்லை. பொதுவழியில் தான் செல்வார். எந்த சுங்கச்சாவடியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதில்லை. துவாக்குடி சுங்கச்சாவடியில்தான் இது போன்ற சம்பவம் 3-வது முறையாக நடைபெற்றுள்ளது. இதுகுறித்து துவாக்குடி போலீஸ் நிலையத்தில் முறைப்படி புகார் கொடுக்க உள்ளோம், என்றனர்.

சசிகலா ஆதரவாளர்கள் மீது வழக்கு

இந்த நிலையில் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக சசிகலா ஆதரவாளர்கள் 10 பேர் மீது துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடியது, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது, தகராறு செய்தது என 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story