விழுப்புரம் அருகே மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்:ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தம்பதி கழுத்தை நெரித்துக் கொலை

விழுப்புரம் அருகே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தம்பதியினர் கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டனர். வட்டிக்கு பணம் கொடுத்த தகராறில் நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி
விழுப்புரம் அருகே வளவனூர் கே.எம்.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜன்(வயது 68). இவருடைய மனைவி உமாதேவி(61). ராஜன், பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், உமாதேவி வளவனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.
ராஜனுக்கு சொந்த ஊர் புதுச்சேரி மாநிலம் பாகூரை அடுத்த திருப்பனப்பாக்கம் ஆகும். அவர் விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்ததால் குடும்பத்தினருடன் வளவனூரிலேயே 40 ஆண்டு காலமாக வசித்து வந்துள்ளார். இவர்களுடைய மகன் ராஜராஜசோழன் பெங்களூருவிலும், மகள் பத்மா புதுச்சேரி லாஸ்பேட்டையிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் ராஜனும், அவரது மனைவி உமாதேவியும் வளவனூரில் தனியாக வசித்து வந்தனர்.
வட்டிக்கு பணம்...
ராஜன், ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் தனக்கு தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் என பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் பத்மா, தனது பெற்றோரின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர்கள் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை.
மர்ம சாவு
இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ராஜன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரும், உமாதேவியும் மர்மமான முறையில் பிணமாக கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே பத்மாவுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் வளவனூா் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே புதுச்சேரியில் இருந்து பத்மா, வளவனூருக்கு விரைந்து வந்து தனது பெற்றோர் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதார்.
நகைகள் கொள்ளை
ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது, உமாதேவி அணிந்திருந்த 2 பவுன் தங்க வளையல்கள், ¾ பவுன் கம்மல், உமாதேவி மற்றும் ராஜன் அணிந்திருந்த 1½ பவுன் தங்க மோதிரங்கள் 3 என மொத்தம் 4¼ பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
கழுத்தை நெரித்துக்கொலை
பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர். இதில் ராஜனும், உமாதேவியும் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, ராஜன், உமாதேவி ஆகிய இருவரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டைரி சிக்கியது
அதோடு ராஜன் வீட்டில் அவர் எழுதி வைத்திருந்த ஒரு டைரியை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் யார், யாருக்கெல்லாம் எவ்வளவு தொகையை கடனாக கொடுத்துள்ளார் என்ற விவரங்கள் அவர்களது பெயர், செல்போன் எண், கடன் கொடுத்த தொகை போன்ற விவரங்களுடன் டைரியில் எழுதி வைத்துள்ளார்.
ராஜனிடம் இருந்து கடன் பெற்றவர்கள் யாரேனும் அந்த தொகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் அந்த கடன் தொகையை கேட்டு அவர்களுக்கு ராஜன் நெருக்கடி கொடுத்திருக்கலாம்.
இதனால் ஆத்திரமடைந்த யாரேனும் ராஜனின் தொந்தரவு தாங்கமுடியாமல் கணவன்- மனைவி இருவரையும் பெட்ஷீட் துணியை எடுத்து அதை தண்ணீரில் நனைத்து அந்த ஈரத்துணியால் இருவரின் கழுத்தை நெரித்துக்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
7 தனிப்படைகள் அமைப்பு
அதன் அடிப்படையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதியினரை கொலை செய்த கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தனிப்படை போலீசார், இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதோடு கொலையாளிகளை பிடிக்க விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.