திருமணமான 7 மாதங்களில்செவிலியர் விஷம் குடித்து தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை
மகேந்திரமங்கலம் அருகே திருமணமான 7 மாதங்களில் செவிலியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
பாலக்கோடு:
மகேந்திரமங்கலம் அருகே திருமணமான 7 மாதங்களில் செவிலியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
செவிலியர்
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அடுத்த வேப்பிலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வித்யா (வயது 23). பி.எஸ்சி. நர்சிங் முடித்து விட்டு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியை சேர்ந்த சக்திவேல் (27) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் வித்யா எம்.எஸ்சி. நர்சிங் படிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு சக்திவேல் மறுப்பு தெரிவித்ததோடு, இனி மேற்கொண்டு எதுவும் படிக்க வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
தற்கொலை
இதனை காரணமாக வைத்து கடந்த மாதம் 20-ந் தேதி வித்யா கணவருடன் கோபித்து கொண்டு வேப்பில அள்ளியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு மனவேதனையில் இருந்த அவர் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வித்யா இறந்தார். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுதொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் கீதாராணி விசாரணை நடத்தி வருகிறார்.