மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி
ஓட்டப்பிடாரம் அருகே மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டப்பிடாரம்;
ஓட்டப்பிடாரம் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் மின்கோபுரம் அமைத்துள்ளது. இந்த நிலையில், ராமசாமி மகன் பெரிய முனியசாமி என்பவர், இந்த நிலத்தில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சம உரிமை உள்ளதால், தனியார் காற்றாலை நிறுவனம் அனைவரிடமும் அனுமதி பெற வேண்டும். நிலத்தில் மின் கோபுரம் அமைத்ததற்கான தொகையை சமமாக பங்கிட்டு வழங்க வேண்டும் என்று கூறி அந்த மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவருடன், மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ் மற்றும் தீயணைப்புத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கூறியதை ஏற்றுக் கொண்டு, பெரிய முனியசாமி போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கினார். முறையாக புகார் அளிக்க வேண்டுமே தவிர இது போன்ற தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் அறிவுரை வழங்கினார். மேலும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவர் மீது ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.