மாணவர்களுக்கு ஏற்படும் மனரீதியான பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வாகாது - நடிகர் விக்ரம்
மாணவர்களுக்கு ஏற்படும் மனரீதியான பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வாகாது என நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.
திருச்சி,
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நடிகர் விக்ரம், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பட குழுவினர் திருச்சி வந்தனர். திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் கோப்ரா திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விக்ரம் கூறும்போது,
இந்த கோப்ரா படத்தின் பெரிய பலம் அதன் இயக்குனர் அஜய் தான். அவர் ஏற்கனவே எடுத்த படங்களை விட கோப்ரா திரைப்படம் வித்தியாசமானதாக இருக்கும். சினிமா என்றாலே எனக்கு பைத்தியம். எனவே தான் இதில் கடுமையாக உழைக்கிறேன். ரசிகர்கள் எங்களை சூழ்ந்து போட்டோ, ஆட்டோகிராஃப் வாங்க வருவது எங்களுக்கு எந்த வகையிலும் தொந்தரவு கிடையாது.
பள்ளி,கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்வது பற்றி கேட்ட கேள்விக்கு,
நான் பல தோல்விகளை சந்தித்து விட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். ஆனால் இந்த தலைமுறை மாணவர்கள் தோல்வியை ஏற்க முடியாதவர்களாக மாறிவிட்டார்கள். மாணவர்களுக்கு ஏற்படும் மனரீதியான பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வாகாது. உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ? அதை உறுதியாக செய்ய வேண்டும்.
உங்களுக்கு என்ன ஆக வேண்டுமோ அதை தீர்மானித்து முடிவு செய்யுங்கள் அதை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெறுங்கள். கீழே விழுந்தால் கூட எழுந்து ஓட வேண்டும் என்றார். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாம் பெருமைப்படும் வகையில் இருக்கும். அந்த படத்தில் நானும் இருப்பது எனக்கு பெரிய பெருமை என்றார்.