அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சம்மன்


அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சம்மன்
x
தினத்தந்தி 7 Aug 2023 10:59 AM IST (Updated: 7 Aug 2023 12:41 PM IST)
t-max-icont-min-icon

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

அ.தி.மு.க.வைச் சேர்ந்த தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், குவாரிகள் உள்ளிட்ட 56 இடங்களில நடத்தப்பட்ட சோதனையில் பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பம், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சி.விஜயபாஸ்கரும், அவரது மனைவியும் வரும் 29-ம் தேதி நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக கடந்த 5-ம் தேதி சி.விஜயபாஸ்கர் ஆஜரான நிலையில் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story