ஞாயிறு விடுமுறை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி,
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
இந்த நிலையில், இன்று ஞாயிறு விடுமுறை மற்றும் முழு ஆண்டு விடுமுறையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்காக அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் நடந்தது. தொடரந்து மற்ற கால பூஜைகள் நடந்து வருகிறது. நாழிக்கிணறு, வள்ளி குகை உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அலைமோதியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடல் அலைகளில் குதித்து விளையாடி மகிழ்ந்தனர்.
பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.