மணலியில் சூப்பர் மார்க்கெட்டில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை - உரிமையாளர்-மேற்பார்வையாளர் கைது


மணலியில் சூப்பர் மார்க்கெட்டில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை - உரிமையாளர்-மேற்பார்வையாளர் கைது
x

மணலியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேற்பார்வையாளர் மற்றும் உடந்தையாக இருந்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

மணலி, மாத்தூர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் செந்தில்குமார். இங்கு பாடியநல்லூரை சேர்ந்த சந்திரசேகரன் (வயது 62) என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். கடையில் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட 3 சிறுமிகளும் வேலை பார்த்து வந்தனர்.

சந்திரசேகரன் அந்த 3 சிறுமிகளிடமும் ெதாடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் சிறுமிகள் மனவேதனை அடைந்தனர். இதற்கிடையே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மேற்பார்வையாளருக்கு சரியான பாடம் புகட்ட சிறுமிகள் 3 பேரும் சேர்ந்து திட்டமிட்டனர். அதன்படி கடந்த 19-ந் தேதி சந்திரசேகரனுக்கு டீ கொடுத்தபோது அதில் பேதி மாத்திரையை கலந்து கொடுத்தனர். இதனால் அவர் பாதிக்கப்பட்டார்.

இதுபற்றி சந்திரசேகரன், கடை உரிமையாளர் செந்தில்குமாரிடம் தெரிவித்தார். ஆனால் சந்திரசேகரன், சிறுமிகளுக்கு அளிக்கப்பட்ட பாலியல் சீண்டல் பற்றி விசாரிக்காமல் 3 சிறுமிகளையும் கையால் தாக்கி வேலையை விட்டு அனுப்பியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சிறுமிகள் 3 பேரும் சவுகார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் விஷம் குடித்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விசாரித்தபோது அவர்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. உடனடியாக சிறுமிகளை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து எண்ணூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மோகனவள்ளி விசாரணை நடத்தினார். சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேற்பார்வையாளர் சந்திரசேகரன் மற்றும் உடந்தையாக இருந்ததாக கடை உரிமையாளர் செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story