கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானவர்களை பிடிக்க தனிக்குழு - போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்


கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானவர்களை பிடிக்க தனிக்குழு - போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:45 PM GMT)

கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்து கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளவர்களுக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்து உள்ளது. அந்த பிடியாணையை நிறைவேற்றி வழக்கை விரைந்து முடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்து கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளவர்களுக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பிக்கிறது. இதுபோன்ற பிடியாணைகளை விரைந்து நிறைவேற்றி குற்றவாளிகள் தண்டனை பெறுவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் நிறைவேற்றம் செய்யாமல் உள்ள பிடியாணைகள் குறித்தும், அவற்றை நிறைவேற்றம் செய்ய முடியாததற்கான காரணங்கள் குறித்தும் கேட்டறிந்து, பிடியாணை குற்றவாளிகளை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் 2 அல்லது 3 போலீசார் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் பிடியாணைகள் நிறைவேற்றுவது சம்பந்தமாக எவ்வித இடர்பாடுகள் இருந்தாலோ, கூடுதலாக போலீசார் தேவைப்பட்டாலோ அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அல்லது என்னை நேரடியாக அணுகி தேவையான உதவிகளை பெறலாம். ஆகையால் பிடியாணைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பிடியாணை குறித்த கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்த போலீஸ்காரர் மகேஷ்குமாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார். இதில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சைபர் குற்றப்பிரிவு கூடுதல் சூப்பிரண்டு உன்னிக்கிருஷ்ணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.



Next Story