செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய, மொட்டை போட்டு வேண்டி கொண்ட ஆதரவாளர்கள்


செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய, மொட்டை போட்டு வேண்டி கொண்ட ஆதரவாளர்கள்
x
தினத்தந்தி 17 Jun 2023 5:57 AM GMT (Updated: 17 Jun 2023 7:02 AM GMT)

செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய வேண்டி அவரது ஆதரவாளர்கள் மொட்டை போட்டு வேண்டுதலை நிறைவேற்றி, அங்கப்பிரதட்சணமும் செய்து, பிற பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.

சென்னை,

தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்துள்ளார். அப்போது இவர், டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செந்தில்பாலாஜி மீது 3 குற்ற வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை கடந்த 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த 13-ந்தேதி நள்ளிரவு செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஐகோர்ட்டு உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய உள்ள சூழலில், அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார். இந்த நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்ற செந்தில்பாலாஜியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி அமலாக்கத்துறை கோரியிருந்தது.

இதன் மீது நடந்த விசாரணையில், நேற்று முதல் வருகிற 23-ந்தேதி வரை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு சென்னையில் கரோனரி ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, கரூர் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள், தமிழகத்தின் கரூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் மொட்டையடித்து கொண்டு வேண்டுதலை நிறைவேற்றி உள்ளனர்.

செந்தில் பாலாஜி விரைவில் குணமடைந்து உடல்நலமுடன் திரும்ப வேண்டும் என அவர்கள் வேண்டி கொண்டனர். கோவிலில் அங்கப்பிரதட்சணமும் செய்தனர். கோவிலுக்கு வருகை தந்த பிற பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.

செந்தில் பாலாஜிக்கு கரோனரி ஆஞ்சியோகிராம் நடந்த பின்னர், அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படியும் டாக்டர்கள் அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர். அவருக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் ஏற்பட்டு உள்ள நிலையில், விரைவில் அறுவை சிகிச்சை செய்யும்படி கூறியுள்ளனர்.


Next Story