அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம்: சென்னை ஐகோர்ட்
அடிப்படை உறுப்பினர்களால் தேர்வாகும் உறுப்பினர்கள் உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கே உச்ச பட்ச அதிகாரம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில், தனி நீதிபதியின் தீர்ப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டினர். கட்சியினர் ஒற்றை தலைமை வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாக கூறியதற்கு எந்த புள்ளி விவரங்களும் இல்லை எனவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது எனவும் குறிப்பிட்டனர்.
தனது உரிமை பாதிக்கப்பட்டதால் தான் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருக்கிறாரே தவிர, 1.50 கோடி உறுப்பினர்களின் உரிமைக்காக அல்ல எனவும் சுட்டிக்காட்டினர்.
பன்னீர்செல்வம் தரப்பில், அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்றும்,கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமேபொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் ஜூலை 11 கூட்டத்துக்கு அனுப்பிய
நோட்டீஸ் செல்லாதது எனவும் வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த 25ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.அதில் எடப்பாடி பழனிசாமி ஜூலை 11 கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து என்றும் சென்னை ஐகோர்ட் தீரப்பளித்துள்ளது.
தனி நீதிபதியின் தீர்ப்பை எத்ர்த்து இரண்டு நீதிபகள் 128 பக்க தீர்ப்பை வழங்கி உள்ளனர். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* உட்கட்சி விவகாரங்களில் சிவில் வழக்கு தொடர முடியாது கூற முடியாது.
* ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை.
* ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என்பது பற்றி பிரதான வழக்கில்தான் முடிவெடுக்க முடியும்;
* ஜூன்23 -பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில் ஜூன்23-க்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என உத்தரவிட முடியாது.
* ஜூன்23 - ஆம் தேதி கூட்டத்திலேயே ஜூலை 11-ந்தேதி கூட்டத்திற்கு உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.சிறப்பு பொதுக்குழுவுக்கு இன்னொரு நோட்டீஸ் தரவேண்டிய அவசியம் இல்லை.
*ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரும் சேர்ந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது.
* அப்படி உத்தரவிட்டால், அது கட்சியின் செயல்பாட்டை முடக்கிவிடும் என கூறப்பட்டு உள்ளது.
* அதிமுக பொதுக்குழுவிற்கே உச்ச பட்ச அதிகாரம் உள்ளது.
* ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாகிவிட்டதா என்பது குறித்து பிராதான வழக்கில் தான்முடிவு எடுக்க முடியும்