செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் ஆய்வு


செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் ஆய்வு
x

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு

ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதா நேற்று ஆய்வு செய்தார். அப்போது நுண்ணுயிர் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களிடம் மக்கும் குப்பையில் இருந்து எப்படி உரம் தயாரிக்கப்படுகிறது என்று விளக்கமாக கேட்டார். இதனைத் தொடர்ந்து மண்ணிவாக்கம் ஊராட்சியில் செயல்படுத்தி வரும் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், கூடுதல் இயக்குனர் குமார், செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார், உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாய் கிருஷ்ணன், வெங்கட் ராகவன், ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம், ஊராட்சி துணைத்தலைவர் சுமதி லோகநாதன், ஊராட்சி மன்ற செயலாளர் ராம பக்தன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பான்குழி ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது திரவக்கழிவு கிடைமட்ட உறிஞ்சி குழியை ஆய்வு செய்தபோது முறையாக கிடைமட்ட உறிஞ்சிக்குழி அமைக்கப்படாததால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படும் என்றும், ஆகவே உறிஞ்சிக்குழி எப்படி அமைக்க வேண்டும் என்றும் வளர்ச்சி பணிகளை சரிவர செய்யாத ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் மாரிச் செல்வத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் சுமதி, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கரசங்கால்

கரசங்கால் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணை, மண்புழு இயற்கை உரம் தயாரித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம் போன்ற வளர்ச்சி பணிகளை ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ள பகுதியில் இணைப்பு குழாய் சேதம் அடைந்தது குறித்தும் கேட்டறிந்தார்‌. இதனைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, புதிதாக கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையம் போன்றவற்றை பார்வையிட்டார்.

பின்னர் கரசங்கால் பஸ் நிறுத்த நிழற்குடை கட்டிடம் பழுதடைந்து இருப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக பஸ் நிறுத்த கட்டிடத்தை சீரமைக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது உதவி இயக்குனர் மணிமாறன், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story