பள்ளி கட்டிடம் கட்ட நிலம் அளவீடு


பள்ளி கட்டிடம் கட்ட நிலம் அளவீடு
x
தினத்தந்தி 4 July 2023 12:27 PM GMT (Updated: 5 July 2023 9:50 AM GMT)

பல்லடம் அருகே 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக பள்ளிக்கு கட்டிடம் கட்ட நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்து கற்களை நட்டனர். இதனால் மாணவ-மாணவிகள் பெற்றோர், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர்

நிலம் அளவீடு

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சி காளிநாதம்பாளையத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 200 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு போதிய கட்டிடம் இல்லாததால் புதிய கட்டிடம் கட்ட பொன்நகரில் உள்ள இட்டோரிப் புறம்போக்கு நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை பள்ளி கல்வித்துறைக்கு நில மாற்றம் செய்யப்பட்டது. இந்த பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்கு நபார்டு வங்கி ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டு ஆகிவிட்டது. இதையடுத்து நிலத்தை அளவீடு செய்து தருமாறு பல்லடம் தாசில்தார், பல்லடம் சட்ட மன்ற உறுப்பினர், கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர், கரைப்புதூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது.

அதனை தொடர்ந்து நேற்று பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், நில அளவையர் அனிதா, நிலவருவாய் ஆய்வாளர் வீரக்குமார், வட்டார நில ஆய்வாளர் சந்திரசேகர், கரைப்புதூர் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் கவுரி, உதவியாளர் நிஷா ஆகியோர் பள்ளி கட்டிடம் கட்ட ஒதுக்கி நிலத்தை அளவீடு செய்தனர். அதனை தொடர்ந்து அளவீடு கற்களும் நடப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் பொறுப்பு பத்மாவதி, ஆசிரியர் பூமா கோவர்த்தினி லோகநாதன், பல்லடம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க.இளைஞர் அணி துணைச் செயலாளர் கோவிந்தராஜ், கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். செய்தி வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வைத்த 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்


Next Story