நடத்தையில் சந்தேகப்பட்டு வெறிச்செயல்: கல்லூரி பேராசிரியை முகத்தில் பிளேடால் வெட்டி கொல்ல முயற்சி


நடத்தையில் சந்தேகப்பட்டு வெறிச்செயல்: கல்லூரி பேராசிரியை முகத்தில் பிளேடால் வெட்டி கொல்ல முயற்சி
x

சென்னையில் நடத்தையில் சந்தேகப்பட்டு கல்லூரி பேராசிரியையின் முகத்தில் பிளேடால் வெட்டி கொல்ல முயற்சித்ததாக அவரது கணவரான அரசு கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். பிச்சைக்காரன் வேடத்தில் வந்து தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை

கல்லூரி பேராசிரியை

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றி வந்தவர், குமாரசாமி (வயது 56). இவர் சென்னை எழும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் ஜெயவாணி (36). தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடந்தபோது குமாரசாமிக்கு வயது 40-ஐ தாண்டிவிட்டது. ஜெயவாணி படித்துக்கொண்டு இருந்தார். ஜெயவாணி குடும்பத்தோடு குமாரசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. ஜெயவாணியை நன்றாக படிக்க வைப்பதாகக்கூறி, குமாரசாமிஅதற்கான பணத்தை செலவழித்து வந்தாராம். பின்னர் ஜெயவாணியை, குமாரசாமியே திருமணம் செய்துகொண்டார்.

நடத்தையில் சந்தேகம்

இருவருக்கும் இடையே 20 வயது வித்தியாசம். ஆரம்பத்தில் அவர்களது வாழ்க்கை நன்றாகவே இருந்தது. காலப்போக்கில் ஜெயவாணியின் நடத்தையில் குமாரசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையொட்டி அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்ததாகத்தெரிகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

பிச்சைக்காரன் வேடத்தில் தாக்குதல்

ஜெயவாணி வழக்கம்போல கல்லூரிக்கு சென்று, பஸ்சில் இருந்து இறங்கி தனது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, குமாரசாமி பிச்சைக்காரன் வேடத்தில் வந்து ஜெயவாணியை வழிமறித்தார். தலையில் குரங்கு குல்லா அணிந்து, முகத்தையும் மறைத்திருந்தார். 2 கைகளிலும் கட்டுப்போட்டு கொண்டு, அழுக்கான ஆடை அணிந்து பிச்சைக்காரன் போல வந்து ஜெயவாணியை தகாத வார்த்தைகளால் திட்டினார்.

பின்னர் கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் ஜெயவாணியின் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். ஜெயவாணி அலறியடித்து ஓடினார். ஆனால் பிச்சைக்காரன் வேடத்தில் வந்து தாக்குதல் நடத்தியது தனது கணவர்தான் என்பதை கணநேரத்தில் புரிந்துகொண்டார். பொதுமக்கள் திரண்டு வரவே குமாரசாமி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காயமடைந்த ஜெயவாணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

அதிரடி கைது

இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசில் ஜெயவாணி புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் ரகுபதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் திருமால் விசாரணை நடத்தினார். பிளேடால் வெட்டி காயம் உண்டாக்குதல், வழிமறித்து தாக்குதல், கொலைமிரட்டல் விடுத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் அதிரடியாக கைது செய்யப்படடு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தேவையற்ற சந்தேகத்தின் காரணமாக தற்போது அந்த குடும்பத்தில் பெரும் புயல் வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story