தனியார் பள்ளியில் மாணவிகள் மர்ம மரணம் - விசாரணை ஆணையம் அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


தனியார் பள்ளியில் மாணவிகள் மர்ம மரணம் - விசாரணை ஆணையம் அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 July 2022 5:48 PM GMT (Updated: 14 July 2022 5:54 PM GMT)

மர்மமான முறையில் உயிரிழந்த கடலூர் மாணவி ஸ்ரீமதியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி,

தனியார் பள்ளியில் மாணவிகளின் மர்ம மரணம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

"கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12 ஆம் வகுப்பு மாணவி அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் பல மாணவிகள் மர்ம மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக யார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போதுதான் பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இரு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை ஆகும்.

அந்தப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். மர்மமான முறையில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். அவரது இறப்புக்கு காரணமானவர்களுக்கு தமிழக அரசு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்."

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.


Next Story